/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகனங்களில் அளவுக்கு அதிகாக பயணிக்கும் மாணவர்கள்.. விபத்து அபாயம்
/
வாகனங்களில் அளவுக்கு அதிகாக பயணிக்கும் மாணவர்கள்.. விபத்து அபாயம்
வாகனங்களில் அளவுக்கு அதிகாக பயணிக்கும் மாணவர்கள்.. விபத்து அபாயம்
வாகனங்களில் அளவுக்கு அதிகாக பயணிக்கும் மாணவர்கள்.. விபத்து அபாயம்
ADDED : நவ 01, 2025 03:08 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆட்டோ, ேஷர் ஆட்டோ ,பஸ்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருவதால் வட்டார போக்குவரத்து துறையினர் , போலீசார் இதை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் , கல்லுாரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்காக சுற்று கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகள் செல்வதற்காக நகர் பகுதிகளுக்கு பஸ்கள், ஆட்டோ, வேன், ேஷர் ஆட்டோக்களில் வருகின்றனர். இது போன்ற வாகனங்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கின்றனர். ஓட்டுநர் உரிமம், வாகனங்களுக்கான உரிய ஆவணங்கள் இன்றியும் மாணவர்களை ஏற்றி செல்வது தொடர்கிறது.
குறிப்பாக சில ஆட்டோக்களில் மூடைகளை அடுக்குவது போன்று மாணவர்கள் ஏற்றப்படுகின்றனர். மாணவர்களின் புத்தக பைகள், மதிய உணவு பைகள் ஒரு அடி நீளம் வரை நீட்டியபடி தொங்குகிறது. மாணவர்கள் இருக்க கூட இடமின்றி நெருக்கியடித்து கொண்டு அமர்கின்றனர். டிரைவர்களின் இருக்கையில் அமர்ந்தபடியும் மாணவர்கள் பயணிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. இதனை எவரும் கண்காணித்து அறிவுறுத்துவதில்லை. கல்லுாரி நேரங்களில் ேஷர் ஆட்டோக்கள் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவதோடு அதிக சவாரிக்காக முண்டியடித்து வேகமாக செல்வதும் நடக்கிறது. இதனால் பாதசாரிகளும், பிற வாகனங்களும் அச்சத்தோடு பயணிக்கின்றன . பஸ்களில் பெரும்பாலும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே செல்வது வழக்கமான ஒன்றாகவிட்டது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை. படிகளில் தொங்கி செல்லும் மாணவர்கள் கிழே விழுந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையும், விபத்து அபாயமும் இருப்பதால் போக்குவரத்து துறையினரும், போலீசாரும் இணைந்து இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
.................
கண்காணிப்பது அவசியம்
ஆட்டோ, ேஷர் ஆட்டோ, பஸ்கள், வேன்கள் கூடுதல் மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. டிரைவர்களை அழைத்து பள்ளி, கல்லுாரி முதல்வர்கள் கூட்டம் நடத்த வேண்டும். அதில் கூடுதலாக மாணவர்களை ஏற்றக்கூடாது என வலியுறுத்த வேண்டும். பொதுவாக வாகன ஓட்டுனர்கள் ஒழுக்க சட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வருகின்றனரா என கண்காணிப்பது அவசியம். பள்ளி, கல்லுாரி பஸ்கள் இயக்கும் டிரைவர்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டு ஓட்டுனர் அனுபவம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற வாகனங்களுக்கு வேககட்டுபாடு குறித்த அறிவுரை வழங்கிட வேண்டும். தொடர் கண்காணிப்பும் நடவடிக்கையும் இருந்தால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
- அறிவழகன், வழக்கறிஞர், திண்டுக்கல்.
.........................

