/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பரப்பலாறு நீரின்றி ஆண்டுக்கணக்கில் வறண்டு கிடக்கும் கொல்லப்பட்டி குளம்
/
பரப்பலாறு நீரின்றி ஆண்டுக்கணக்கில் வறண்டு கிடக்கும் கொல்லப்பட்டி குளம்
பரப்பலாறு நீரின்றி ஆண்டுக்கணக்கில் வறண்டு கிடக்கும் கொல்லப்பட்டி குளம்
பரப்பலாறு நீரின்றி ஆண்டுக்கணக்கில் வறண்டு கிடக்கும் கொல்லப்பட்டி குளம்
ADDED : நவ 05, 2025 01:03 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லப்பட்டி குளத்திற்கு பரப்பலாறு அணை நீர் கிடைக்க வழிவகை இல்லாததால் பல ஆண்டுகளாக வறண்டே காணப்படுகிறது.
அணை நீர் இந்த குளத்திற்கு செல்லும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொல்லபட்டி குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோடு இந்த குளத்தின் ஓரத்தில் செல்கிறது.
60 ஏக்கருக்கு மேல் உள்ள இந்தக் குளத்தின் நீராதாரம் அத்திகோம்பை ஊராட்சி வழியாக செல்லும் ஓடை ஒன்று மட்டும் தான். கோம்பை பகுதியில் பலத்த மழை பெய்யும் போதும், காளாஞ்சிபட்டி ஊத்துக்குளம் நிரம்பி மறுகால் செல்லும்போதும் இந்த ஓடையில் நீர் வரத்து இருக்கும். ஓடையின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தொடர் மழை பெய்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடையில் சென்றால்தான் குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்படும் நிலை உள்ளது.
இந்த குளம் நிரம்பி மறுகால் செல்லும்போது குளத்தை சுற்றிய நுாற்றுக்கணக்கான விவசாய கிணறுகள், போர்வெல்களுக்கு நீர் வரத்தை கொடுக்கிறது. காளாஞ்சிபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பல கிணறுகளுக்கு நீர் வரத்து ஏற்படுத்தும். குளம் நிரம்பி மறுகால் சென்று பல ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
தற்போது குளத்தின் நீர் வரத்து ஓடையில் கழிவு பொருட்கள், இறைச்சி கழிவுகள் கோணிப்பைகளில் கட்டப்பட்டு துாக்கி வீசப்படுகிறது.
இவை பல நாட்களாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் குளத்தின் அருகே சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மற்ற குளங்களுக்கு பரப்பலாறு அணை தண்ணீர் செல்கிறது.
இதனால் மழை பெய்யும் நாட்களில் அணையின் உபரி நீரைக் கொண்டு அதன் கீழ் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கிறது. ஆனால் கொல்லபட்டி குளத்திற்கு பரப்பலாறு அணை நீரை கொண்டு செல்ல வழி இல்லாததால் ஆண்டுக்கணக்கில் குளம் வறண்டு காணப்படுகிறது. குளத்து பகுதியில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரப்பலாறு அணையில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

