தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மறுகால் கட்டமைப்பு இல்லாத குளத்தால் பரிதவிப்பு

 மறுகால் கட்டமைப்பு இல்லாத குளத்தால் பரிதவிப்பு

 மறுகால் கட்டமைப்பு இல்லாத குளத்தால் பரிதவிப்பு


ADDED : மார் 08, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை ஒன்றியம் பி.கொசவபட்டி ஊராட்சி லக்கம்பட்டி துலுக்கன் குளத்தில் மறுகால் கட்டமைப்பு இல்லாததால் நீர் நிரம்பும்போது கரை அரித்து குளம் உடைந்து கிராமம் வழியே நீர் வெளியேறும் ஆபத்தான நிலை உள்ளது.

பல்வேறு காலங்களில் நமது முன்னோர் கடும் பஞ்சத்தை சந்தித்ததால் மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர். சமீபத்தில் 2003, 2017ல் கூட கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது. அதன்பின் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியது.

இந்நிலையில் சில ஆண்டுகளாக பல குளங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் நீர் வரத்து வாய்ப்பை இழந்து வருகின்றன. இதில் சிறிது மாறுபட்டு வடமதுரை ஒன்றியம் பி.கொசவபட்டி ஊராட்சி லக்கம்பட்டியில் இருக்கும் துலக்கன் குளத்தின் ஆபத்தான நிலை குறித்து பார்ப்போம்.

அய்யலுார் கோம்பை, புத்துார் மலைகளில் பெய்யும் மழைநீர் வரட்டாறாக உருண்டோடி குளத்துாரில் சந்தனவர்த்தினி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் மோர்பட்டி பகுதியில் பிரியும் நீர்வரத்து வாய்க்கால் மூலம் கிடைக்கும் நீர் தும்மலக்குண்டு பெரிய குளத்தை நிரப்பும்.

இதன் மறுகால் நீர் கொசவபட்டியை சுற்றியிருக்கும் புல்லவாடன் செட்டிகுளம், சிங்க செட்டிகுளம், ஓட்டைக்குளம் வழியே லக்கம்பட்டி துலக்கன் குளத்திற்கு அடுத்தடுத்து சென்றடைகிறது. சுற்றுப்பகுதி விளைநிலங்களில் பெய்யும் நீரும் இக்குளத்திற்கு வந்தடைகிறது.

ஆனால் குளம் நிரம்பும்போது கரைகள் பாதிப்பின்றி நீர் வெளியேற வசதியாக இருக்கும் மறுகால் கட்டமைப்பு வசதி இங்கு இல்லை. இதனால் குளம் நிரம்பினால் கரையை சேதமாக்கி நீர் கிராமம் வழியே வெளியேறும் ஆபத்துடன் உள்ளது.

குளம் ஆக்கிரமிப்பு முருகேசன், ஊர் நாட்டாண்மை, லக்கம்பட்டி: லக்கம்பட்டி குளம் நிரம்பும்போது முறையாக நீர் வெளியேறும் மறுகால் கட்டமைப்பு இல்லை. விவசாயத்திற்கு நீர் எடுக்க உதவும் ஒரே ஒரு மதகும் மண் மூடிக்கிடக்கிறது. இதனால் நீர் நிரம்பும் போது கரை சேதமாகி வெளியேறும் நீரால் கிராமம் பாதிக்கப்படும் பேராபத்து உள்ளது. சேகரமான நீரையும் விவசாயிகள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். குளத்திற்குள் சிலர் ஆக்கிரமிப்பு வேலி அமைத்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறையில் புகார் செய்து இரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

இனியும் அலட்சியம் கூடாது கார்த்திக், ஊர் நிர்வாகி, லக்கம்பட்டி: காலநிலை, பருவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இனி குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்படுவது சாதாரணமாக நடக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே இப்பகுதியில் கனமழை பெய்தால் லக்கம்பட்டி குளமும் விரைவாக நிரம்பும். முறையான மறுகால் கட்டமைப்பு இல்லாத நிலையில் பெரிய ஆபத்தாக மாறிவிடும். இவ்விஷயத்தில் இனியும் அரசு நிர்வாகம் அலட்சியமாக இருக்கக் கூடாது. குளத்திற்குள் வளர்ந்திருக்கும் முட்புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us