ADDED : மே 06, 2026 05:39 AM

திண்டுக்கல்: மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் சட்டசபை தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு, வி.வி.பேட் இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக ஓட்டுப்பதிவு இயந்திர கிட்டங்கியில் வைத்து கலெக்டர் சரவணன், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளின் முன்னிலையில் சீல்' வைக்கப் பட்டது.
மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் 3839 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3128 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் வி.வி.பேட் இயந்திரங்கள் தேர்தல் பணியில் பயன்படுத்தப் பட்டன.
தேர்தல் முடிந்த நிலையில் இவைகளின் செயல்பாடுகளில் எந்த மாறுபாடும் இல்லாதவாறு, ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைத்தனர்.
இதில் கலெக்டர் சரவணன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாத்திமாசகாயராஜ், தொகுதி தேர்தல் அலுவலர்கள் ,அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
