ADDED : ஜூலை 23, 2026 11:16 PM
திண்டுக்கல்: பழநி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நில மோசடி வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை, சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை ஆவணப்படுத்தும் பணியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் மோசடியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி டி.கே.என்.புதுார் சேதுபதி ஆகிய இருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,சஜிதா, டி.எஸ்.பி., அஜய்தங்கம் விசாரணை நடத்துகின்றனர். ஜூலை 16ல் விசாரணையை துவங்கிய போலீசார் புகாருக்குள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, நில புரோக்கர், பத்திர எழுத்தர், சாட்சிகள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், பதிவுத்துறை அலுவலகம், மடத்துக்கு சொந்தமான நிலம், கோயில் நிர்வாக அலுவலகம் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் நிலமோசடி குறித்து கூடுதல் பதிவுத்துறை ஐ.ஜி., சுதா மால்யா, உதவி ஐ.ஜி.,க்கள் கண்ணன், பூங்கொடி தலைமையிலான உயர்மட்ட குழுவினர் பழநியில் ஆய்வு நடத்தினர்.
மோசடி பத்திரப்பதிவில் நடந்த குளறுபடிகள், அந்த சமயத்தில் பொறுப்பு சார்பதிவாளர் நியமிக்கப்பட்டதன் பின்னணி, பத்திரப் பதிவிற்கு துறைரீதியாக சார்பதிவாளருக்கு வழங்கப்பட்ட அனுமதி, அவரது ஆவணக்குறிப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இதில் கிடைத்த தகவல்களை கொண்டு அறிக்கை தயாரிக்கும் பணியில் உயர்மட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
8 நாட்களாக நடந்த சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கிடைத்த சாட்சியங்கள், ஆதாரங்கள், விசாரணை முடிவுகள், தரவுகளை தொகுத்து ஆவணப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
விரைவில் இவ்வழக்கு அடுத்தகட்டத்திற்கு செல்லும் என போலீசார் தெரிவித்தனர்.
