ADDED : ஆக 22, 2026 02:10 PM
கொடைக்கானல், ஆக.23
கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு அச்சுறுத்தும் காட்டுமாடுகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். சமீபமாக வனப்பகுதியில் மேய்ச்சல் உணவு இல்லாத நிலையில் பசுமை புல்வெளி, தண்ணீரை தேடி காட்டுமாடுகள் கிராமம், நகரத்திற்குள் வரும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் வனவிலங்கு, மனித மோதல் ஏற்பட்டு உயிர்பலி, காயம் அடைவது போன்ற அசாதாரண நிலை ஏற்படுகிறது.
பெயரளவிற்கு வனத்துறை கண்காணிப்பு குழுக்களை நியமித்த போதும் பலனில்லை. மாறாக காட்டுமாடுகள் போக்கு காட்டி நகரை விடுத்து செல்ல மறுக்கின்றன. வில்பட்டி குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதரணமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
குறிஞ்சியாண்டவர் கோயில் பின்புறம் கூட்டுறவு நகர், மலர்ந்த ரோஜா, எம்.எம்., தெருவில் காட்டுமாடு தாக்கி பொதுமக்கள் காயமடைந்தனர். காட்டுமாடுகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
