UPDATED : அக் 09, 2026 12:29 AM
ADDED : அக் 09, 2026 12:26 AM
திண்டுக்கல்: மதுரை மாவட்டம் மேலுார் தனியார் நிதி நிறுவனம் தாங்கள் பரிந்துரைக்கும் ஆன்லைன் செயலி வழியாக முதலீடு செய்தால் 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என அறிவித்தது.
இதனை நம்பி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். இதற்கிடையே நிதிநிறுவனம் மூடப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. ரூ.30 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்தால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து முகவர்களாக செயல்பட்ட நத்தம் காசம்பட்டி ரமேஷ் 30, அவரது மனைவி அனிதா 26, விஜய் 27 உள்பட 9 பேரை கைது செய்தனர். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ரமேஷ், அனிதா, விஜய் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,சரவணக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திண்டுக்கல் கலெக்டர் துர்கா உத்தரவிட்டதை தொடர்ந்து மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
