ADDED : மார் 15, 2024 07:00 AM

வேடசந்துார் : திண்டுக்கல் வேடசந்துார் மாரம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர். 8 ஆண்டுகளாக இவர் ராணுவத்தில் பணியாற்றினார்.
இந்நிலையில் பாஸ்கர் ஒருமாத விடுமுறைக்காக சண்டிகர் - மதுரை செல்லும் ரயிலில் திண்டுக்கல்லுக்கு முன்பதிவு செய்து நேற்று அதில் பயணித்தார். ரயில் கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 11:34 மணிக்கு வந்தது. பாஸ்கர் திண்டுக்கல் வந்ததாக நினைத்து கீழே இறங்கினார். திண்டுக்கல் வரவில்லை என சுதாரித்த பாஸ்கர் மீண்டும் ரயிலில் ஏற முயன்றபோது ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தார்.
அவரது உடலை கரூர் ரயில்வே போலீசார் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்தனர்.
பாஸ்கரின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் வேடசந்துார் மாரம்பாடிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

