ADDED : ஜூன் 16, 2026 07:55 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போதைப்பொருட்கள் மெத்தபெட்டமைன், கஞ்சா சப்ளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நாகல்நகரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகப்படும்படி நின்ற காரை சோதனை செய்ததில் 1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் காரில் வந்தவர்கள் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு ஈ.வி.என்.,சாலையைச் சேர்ந்த ரகுராம் 33, திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் 32, என தெரியவந்தது. கஞ்சா சப்ளை செய்ய முக்கிய நபரை அழைத்து செல்ல அவர்கள் காத்திருந்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து மற்றவர்களையும் பிடிக்க அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி விட்டார். அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் 0.85 மி.கி., உயர் ரக பவுடர் போதைப் பொருளான மெத்ஆம்பெட்டமைனை பறிமுதல் செய்யப்பட்டது. ரகுராம், அப்துல் பாசித் கைது செய்யப்பட்டனர். ஒரு கார், டூவீலர், 3 அலைபேசிகள், ரூ.8 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.
