ADDED : ஜன 22, 2026 05:42 AM
வடமதுரை: அய்யலுார் இச்சுத்துப்பட்டியில் புறம்போக்கு இடம் என வனத்துறை இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததால் குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
அய்யலுார் செந்துறை ரோட்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது இச்சுத்துப்பட்டி. இங்கு குடிநீர் தேவைக்காக புறம்போக்கு நிலம் என மக்கள் அடையாளம் காட்டிய பகுதியில் பேரூராட்சி ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார், குழாய் பாதை, குடிநீர் தொட்டிகளை நிறுவியது. ஆழ்துளை கிணறு அமைத்த இடம் வனத்துறை பகுதிக்குள் வருவது தெரிய வனத்துறை எதிர்பார்ப்பால் மின்மோட்டார் உபகரணங்களை பேரூராட்சி அகற்றியது. ஆழ்துளை கிணற்றை மூட வனத்துறை ஆயத்தமாக மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.பல ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு திட்டம் பயன்பாடின்றி கிடக்கிறது. குடிநீர் தேவைக்காக மக்கள் பரிதவிப்பும் தொடர்கிறது. இங்குள்ள சிக்கலை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

