ADDED : செப் 20, 2026 08:04 PM
நத்தம், செப். 21 – நத்தம் -கோவில்பட்டியில் இருந்து ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிஜெகன், வடக்கு ஒன்றியப் பொதுச் செயலாளர் கிரி, நகர பொதுச் செயலாளர் வெங்கடேஷ் பிரசாத் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வீரமணி வரவேற்றார். நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூமாலைகளால் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் நத்தம் -கோவில்பட்டி வந்தடைந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தர்பார் நகர், பஸ் ஸ்டாண்ட், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை, வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் தீபாராதனைக்கு பின்னர் அம்மன் குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. பாதுகாப்பில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், உதவி எஸ்.பி., மஞ்சும்மா, இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். நத்தம் சுற்று வட்டாரங்களில் இருந்து கொட்டும் மழையிலும் ஆங்காங்கே பொது மக்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. கொடைக்கானல் நகரில் வைக்கப்பட்ட ஏராளமான சிலைகள் நேற்று ஏரிச்சாலையில் இருந்து, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நீர்நிலையில் விஜர்சனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
