ADDED : மார் 19, 2026 04:57 AM
திண்டுக்கல்: தேர்தல் விதிமீறல் தொடர்பாக 'சி -விஜில்' செயலி மூலம் விதிமீறல் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
தேர்தல் சந்தேகம், புகார்களை ஒருங்கிணைக்கவும், நடவடிக்கைக்கும் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 1950 என்ற இலவச எண் ,'சி -விஜில்' செயலி மூலம் விதிமீறல் புகார்களை பதிவு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேற்று காலை வரை வாக்காளர் அட்டை தொடர்பாக 59 அழைப்புகள், தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து 5 புகார்கள், சி- விஜில் செயலி மூலம் இரண்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் வாக்காளர் அட்டை சந்தேக புகாருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், வேடசந்துார் பகுதியில் பணம், மதுபாட்டில் விநியோகம் குறித்த 5 புகார்கள், நடத்தை விதிமீறல் குறித்து செயலியில் பதிவு செய்யப்பட்ட 2 புகார்கள் குறித்து பறக்கும் படையினர் விசாரிக்கின்றனர்.
கண்காணிப்புக் குழு செயல்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் ஜி.பி.எஸ்., கருவி மூலம் வாகன வழித்தடத்தை 'டிராக்' செய்யவும் கட்டுப்பாட்டு அறையில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
தேர்தல் சந்தேகம், தீர்வு, புகார், விசாரணை, அழைப்புகளை கையாளுதல், சமூக வலைதள கண்காணிப்பு, களப்பணியாளர்கள், பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு கையாள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
