ADDED : ஏப் 24, 2026 10:10 PM

திண்டுக்கல்:மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை மையமான ரெட்டியார்சத்திரம் மாங்கரை பிரிவில் உள்ள அண்ணா பல்கலை வளாகம் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.
பல்கலை வளாக தரைதளத்தில் திண்டுக்கல், ஆத்துார் தொகுதி , முதல் தளத்தில் வேடசந்துார், நத்தம் தொகுதி , இரண்டாம் தளத்தில் ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை அறை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.ஓட்டு எண்ணிக்கை மே 4ல் நடக்க உள்ள நிலையில் அதுவரை பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எஸ்.பி., பிரதீப் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மத்திய துணை ராணுவ படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மாவட்ட போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு ஒரு டி.எஸ்.பி., தலைமையில் 100 போலீசார் சுழற்சி முறையில் தினமும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மே 4ல் கூடுதல் போலீசர் நியமிக்கப்படுவர் என்றார்.
