ADDED : மே 06, 2026 05:42 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம லெக்கையின் கோட்டை பைபாஸ் ரோட்டில் கொல்லப்பட்டி குளம் அருகே நீர்வரத்து ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியினர் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் நகருக்குள் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் லெக்கையன்கோட்டையில் இருந்து மடத்துக்குளம் வரை புதிதாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த ரோடு துவங்கும் இடம் அருகே குளத்திற்கு நீரை கொண்டு சேர்க்கும் ஓடையில், காய்கறி, இறைச்சி, கோழி, மீன் ,பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து விதமான குப்பையும் சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு துாக்கி வீசப்படுகிறது. இவை பல நாட்களாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அழுகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இறைச்சி கழிவுகளை உண்ணவரும் தெருநாய்களால் அவ்வழியாக செல்லும் டூவீலர் ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் பலர் விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி இங்கு குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும் என சுற்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொற்று பரவும் ஆபத்து சுரேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் கொல்லபட்டி குளம் பகுதியில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. வேடசந்துார் சர்வீஸ் ரோடு தொடங்கும் இடத்தை கடந்து செல்லும்போது மூக்கை கையால் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.குப்பையை ரோட்டுப் பகுதியில் கொட்டுவதால் ஈக்கள் , பிற பூச்சிகள் மொய்க்கின்றன. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் மூலம் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. நீர்நிலைப் பகுதிகளில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் நிறம் மாறவும் வாய்ப்பு உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஹெரால்ட் ஜாக்சன், பேராசிரியர், ஒட்டன்சத்திரம்: ரோடு பகுதிகள், நீர்நிலைப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் ,தேங்காய் மட்டைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் என அனைத்து விதமான குப்பை கழிவுகளையும் ரோடு பகுதிகளில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுவதுடன் அந்த வழியில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ரோட்டு பகுதி, நீர்நிலைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். குப்பைகளுடன் சேர்த்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ணவரும் நாய்கள் இப்பகுதியில் அலைந்து திரிவதால் டூவீலர்களில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது. பல நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது என்றார்.
தீர்வு ரோட்டுப் பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து குப்பையை கொட்டுபவர்கள் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு இப்பகுதியில் குப்பையை கொட்டுவதற்கு நிரந்தரமாக தடை விதித்து இறைச்சிக்கடை உரிமையாளர்களிடம் இப்பகுதியில் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்ய வேண்டும். குப்பையை நீர்நிலைப் பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காப்பிலியபட்டி பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் அங்கே சென்று கொட்ட அறிவுறுத்துவதோடு இங்கு கொட்டப்பட்ட குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி, அருகே உள்ள ஊராட்சிகளில் இது குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகிறது.
