/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிமகன்கள் பிடியில் வாரச்சந்தை
/
குடிமகன்கள் பிடியில் வாரச்சந்தை
ADDED : ஆக 13, 2025 02:09 AM

நிலக்கோட்டை:நிலக்கோட்டை வாரச்சந்தை குடிமகன்கள் பிடியில் சிக்கி தவிப்பதோடு , இதன் நாலாபுறமும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு குப்பைமேடுகளாக காட்சி தருகிறது.
நிலக்கோட்டை வாரச்சந்தை சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.இங்கு வத்தலக்குண்டு, திண்டுக்கல், செம்பட்டி, கொடைரோடு, சின்னாளபட்டி வியாபாரிகள் கடை வைக்கின்றனர். நிலக்கோட்டையை சுற்றிய பத்துக்கு மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். வாரச்சந்தையை பராமரிக்க தனியாருக்கு ஏலம் விடப்பட்டு கடைக்கான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வார சந்தையின் சுகாதாரம் குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற நிலையே தொடர்கிறது.
வாரச்சந்தையில் உள்ள நுாலகத்திற்கு பின்புறம் சிறுநீர் கழிப்பதால் நுாலகத்தில் அமர முடியாத நிலை உள்ளது.இதோடு அனைத்துப் பகுதிகளிலும் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் துர்நாற்றம், சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் என வார சந்தையின் நிலை தொற்று நோயை உருவாக்கும் இடமாகவே உள்ளது.
சந்தை தவிர மற்றநாட்கள் குடிமகன்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.இவர்கள் வீசி செல்லும் மது காலிபாட்டில்கள் சந்தைக்கு வருவோர் கால்களை பதம் பார்க்கிறது.
நடமாட சிரமமா கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், என். கோவில்பட்டி : சந்தையை நவீனப்படுத்துவதற்கு பேரூராட்சி முயற்சிக்க வேண்டும். நாள்தோறும் சுத்தம் செய்தால் மட்டுமே அப்பகுதி சுகாதார கேட்டிலிருந்து தப்பும். மழை பெய்தால் கோழிக்கழிவுகளால் துர்நாற்றம், சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் துர்நாற்றம் என அப் பகுதியில் நடமாடுவது சிரமமாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
வசூல் ஓகே வசதிகள் இல்லையே அண்ணாதுரை, வைகை பாதுகாப்பு குழு, நிலக்கோட்டை: சந்தையை நாள்தோறும் சுத்தம் செய்தால் தான் சுகாதாரக் கேட்டில் இருந்து தப்பிக்க முடியும். பராமரிப்பதற்காகத்தான் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. சந்தை நாளில் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாகவே வசூல் நடக்கிறது. ஆனால் பராமரிப்பு என்பது பெயரளவிற்கு கூட இல்லை. சந்தையில் வியாபாரிகளுக்காக கட்டடங்கள் கட்ட வேண்டும். கதவுகள் அமைத்து பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். கோழிக்கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்.

