பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் தொகுதி மாறியது ஏன்: நேரிடையாக மோதும் அ.தி.மு.க.,- தி.மு.க.,
பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் தொகுதி மாறியது ஏன்: நேரிடையாக மோதும் அ.தி.மு.க.,- தி.மு.க.,
ADDED : மார் 28, 2026 11:03 PM
திண்டுக்கல்;கட்சி தலைமை நெருக்கடியால் பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். திண்டுக்கல்லில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.,-தி.மு.க., மோதும் நிலையுள்ளது.
பழநி தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வென்ற தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனுமான செந்தில் குமார் வரும் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு பழநி வெற்றி தொகுதியாக இருந்தும் அத்தொகுதி கூட்டணியில் மார்க்சிஸ்ட்க்கு மாற திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எதிர்காலத்தில் பழநி தனி மாவட்டமாகும் சூழல் ஏற்பட்டால் மேற்கு மாவட்ட செயலர் அமைச்சர் சக்கரபாணி கை ஓங்கும் நிலையில் அங்கு போட்டியிடுவது சரிவராது என்பதால் தொகுதி மாறுவதாக கட்சியினர் கூறுகின்றனர். ஆனாலும் இது காரணமல்ல என மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அதாவது 2021 தேர்தலில் 7 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க., வெல்ல 4 தொகுதிகளில் தி.மு.க., வென்றது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு வருத்தத்தை கொடுக்க அமைச்சர் பெரியசாமி மீது ஸ்டாலின் சற்று அதிருப்தியில் இருந்தார். இதனால் தான் சக்கரபாணி அமைச்சர் அந்தஸ்தை பெற்றார். இதை மனதில் வைத்து பழநியை மார்க்சிஸ்ட்க்கு ஒதுக்கி திண்டுக்கல்லில் தி.மு.க., போட்டியிடும் என தலைமை அறிவித்தது. மேலும் திண்டுக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சீனிவாசனை வெல்ல முடியும் என்ற கணக்கிலும் கட்சி தலைமை காய் நகர்த்தியுள்ளது.
மகன் இங்கு போட்டியிடுவதால் அவரை வெற்றி பெற அமைச்சர் பெரியசாமியின் முயற்சி கைகொடுக்கும் என கணக்கு போட்டுள்ளார் ஸ்டாலின்.
தி.மு.க., அ.தி.மு.க., நீண்ட தேர்தலுக்கு பிறகு நேருக்கு நேர் மோதும் நிலையில் இரு கட்சியினரும் குஷியில் உள்ளனர். அ.தி.மு.க., சீனிவாசனுக்கு வெற்றி எளிது என நம்பியிருந்த கட்சியினருக்கு செந்தில்குமார் களம் இறங்கி உள்ளதால் அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
