ADDED : செப் 17, 2026 05:49 AM

ஒட்டன்சத்திரம்: மாவட்டத்தில் ஆறுகள், நீர்வரத்து கால்வாய்கள், சிற்றோடைகளில் முளைத்திருக்கும் செடி கொடிகள், சீமை கருவேல மரங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தடையின்றி நீர்நிலைகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நல்ல மழை பொழிவு இருக்கும். அப்போது பெய்யும் மழைநீரை கொண்டு நீர்நிலைகளுக்கு வரத்து உண்டாகும்.
மாவட்டத்திலுள்ள பல நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்களில் புல் பூண்டுகள், சீமை கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் பெய்யும் மழை நீரானது வழியிலேயே உறிஞ்சப்படுகிறது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக ஆறுகள், ஓடைகள் சிறிய கால்வாயாக சுருங்கி விட்டது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி, நீர்நிலைகளை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள நீரோடைகளின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.
மழை பெய்யும்போது தண்ணீர் வழியிலேயே வீணாகி விடாமல் குளம், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு முழுமையாக செல்லும் வகையில் நீர் வழித்தடங்களை துார்வாரி, செடி கொடிகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
