ADDED : ஜன 26, 2026 05:27 AM

பழநி: பழநி கிரிவீதியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
பழநி முருகன் கோயிலுக்கு தற்போது ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வருகை புரிகின்றனர். தைப்பூச விழா துவங்குவதை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நாட்களில் குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து மலைக்கோயில் செல்லவும் படிப்பாதை மூலம் கீழே இறங்கவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் கூட்ட நெரிசல் சமயங்களில் விரைவில் பக்தர்கள் மேலே செல்லவும் கீழே இறங்கவும் எளிதாக உள்ளது.
இந்நிலையில் தைப்பூச நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கிரிவீதியில் பாதை மாற்றம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதி குடமுழுக்கு மண்டபம் முதல் கிழக்கே கிரி வீதி பகுதிக்கு பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இதனால் பக்தர்கள் பனி, மழை, வெயில் சமயங்களில் பாதுகாப்பாக கிரி வீதியில் வரிசையில் காத்திருக்கலாம்.
மேலும் கிரிவீதி பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
