மூன்று மாநிலங்களில் பழச்சாறு விற்பனையை துவங்கிய தொழிலாளர்கள்
மூன்று மாநிலங்களில் பழச்சாறு விற்பனையை துவங்கிய தொழிலாளர்கள்
ADDED : மார் 23, 2026 06:32 AM
திண்டுக்கல்: தமிழகத்தில் கோடைகாலம் துவங்கிய நிலையில் குளிர்பானம், பழச்சாறுகள் விற்பனை அதிகரித்து உள்ளன. இச்சூழ்நிலையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் வசிக்கும் தொழிலாளர்கள் ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஐஸ் கட்டிகளால் குளிரூட்டப்படும் ஒரு சில்வர் ஸ்டீல் மூலம் தயாரித்த ஐஸ் பெட்டிகளை தயாரித்து, அதனை மூன்று மாநிலங்களுக்கு கொண்டு சென்று பழச்சாறு விற்பனையை துவக்கி உள்ளனர்.
தாங்கள் செல்லும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து குடும்பத்தினருடன் தங்கி ஐஸ் பெட்டியில் எழுமிச்சைச்சாறு (லெமன்), புரூட் மிக்சர் ஜூஸ், ரோஸ் மில்க், பாதாம் பால், வாட்டர்மெலன் ஜூஸ் தயாரித்து, ஒரு டம்ளர் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.
திண்டுக்கல் முழுவதும் கொசவப்பட்டி, காமலாபுரம், சின்னாளபட்டி, சிலுவத்துார் ரோடு, ரவுண்ட் ரோடு, என்.பஞ்சம்பட்டி, பழநி, கொடைரோடு, வத்தலக்குண்டு, வேடசந்துார், ஒட்டன்சந்திரம், கள்ளிமந்தயம், நெய்க்காரபட்டி, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், கொடைக்கானல் என மாவட்டம் முழுவதும் வீடு பிடித்து, வியாபாரத்தை துவக்கி உள்ளனர்.
கிழக்கு மரியநாதபுரம் பேராவூரணி வியாபாரி நீலகண்டன் கூறியதாவது: கோடைகாலமான பிப்.20ல் பேராவூரணியில் இருந்து புறப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விடுவோம். என்னுடன் உறவினர்கள் என 40க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் திண்டுக்கல் வந்தோம். இங்கு குடும்பத்தினருடன் ரூ.2,500 வாடகை வீட்டில் தங்கி உள்ளோம். இம்முறை நாங்கள் வியாபாரத்திற்காக வருவது 10 வது ஆண்டாகும். பிப்ரவரியில் 8 நாட்கள், மார்ச், ஏப்ரல் மே முடிந்து ஜூனில் வியாபாரம் முடிந்து, மீண்டும் இங்குள்ள வாடகை வீட்டை காலி செய்து பேராவூரணி செல்வோம். ஜூஸ் தயாரிப்பு தொழில்நுட்பத்தை யாருக்கும் சொல்லித்தருவது இல்லை. குறைந்த விலை. தரமான ஜூஸ் வழங்குவதை ஊர்கூடி பெரியோர் முன்னிலையில் முடிவு செய்து அதன்படி வியாபாரம் செய்வோம். அதனால் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, பங்கனபள்ளி வரை மட்டும் சென்று விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தஞ்சாவூர் ஐஸ் பெட்டி ஜூஸ் விற்பனை தொழிலாளர்கள் வியாபித்துள்ளோம்., என்றார்.
