/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜாதி அரசியல்; கட்சியினரை அரவணைக்காததால் அதிருப்திதி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நீக்கம்
/
ஜாதி அரசியல்; கட்சியினரை அரவணைக்காததால் அதிருப்திதி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நீக்கம்
ஜாதி அரசியல்; கட்சியினரை அரவணைக்காததால் அதிருப்திதி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நீக்கம்
ஜாதி அரசியல்; கட்சியினரை அரவணைக்காததால் அதிருப்திதி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நீக்கம்
ADDED : பிப் 20, 2025 01:59 AM
ஜாதி அரசியல்; கட்சியினரை அரவணைக்காததால் அதிருப்திதி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நீக்கம்
திருச்செங்கோடு:நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் மீது அடுக்கடுக்கான புகார்களால், அவரை, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய கட்சித்தலைமை, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்திக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல்லை கிழக்கு மாவட்டமாகவும்; ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையத்தை மேற்கு மாவட்டமாகவும், தி.மு.க., பிரித்தது. இதில், கிழக்கு மாவட்டத்திற்கு, மாவட்ட செயலாளராக ராஜேஸ்குமார் எம்.பி.,யும்; மேற்கு மாவட்ட செயலாளராக மதுரா செந்திலையும் நியமித்தனர்.
இந்நிலையில், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மீது பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்றன. இதையடுத்து, அவரை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து, மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தியை நியமனம் செய்து, கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த அதிரடி மாற்றம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் ஆதரவாளரான மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றினார். அப்போது, 2021 சட்டசபை தேர்தலில், ப.வேலுார் தொகுதியில், தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும், குமாரபாளையம் தொகுதியிலும், தி.மு.க., தோல்வியடைந்தது. திருச்செங்கோடு தொகுதியில், கொ.ம.தே.க., ஈஸ்வரன் மட்டுமே, தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்றார். அதனால், மூர்த்தி மாற்றப்பட்டார். இதற்கிடையில், ஜாதிய அமைப்பு, அ.தி.மு.க.,வில் இருந்து வந்த, மதுரா செந்தில், 2010ல் தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிலையில், 2022ல், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளராக மதுராசெந்தில் நியமிக்கப்பட்டார்.
அதற்கு முக்கிய காரணம், 2021ல் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்தியை தலைமை மாற்றியது. அப்போது, அந்த இடத்துக்கு வெப்படை செல்வராஜ் பெயர் அடிபட்டது. ஆனால், இளைஞர் அணியில் இருப்பதாக கூறி, மதுராசெந்தில் மேலிடத்தின் மூலம் காய் நகர்த்தியதால், அவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். வெப்படை செல்வராஜ், பள்ளிப்பாளையம் ஒன்றிய செயலாளராக நியமித்து தலைமை அறிவித்தது. இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மதுரா செந்திலை நியமிக்கும்போதே, அமைச்சர் நேரு தரப்பில், 'இவர் வேலை செய்யமாட்டார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, 'டப் பைட்' கொடுக்கமாட்டார்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், உதயநிதியின், 'பிரஷர்' காரணமாக நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியினர் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. குறிப்பாக, நான்கு மாதங்களுக்கு முன், பள்ளிப்பாளையத்தில் நடந்த கட்சி கூட்டத்தில், ஈரோடு தி.மு.க.,- எம்.பி., பிரகாஷ், மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் முன்னிலையில், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் குமார், நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. அப்போது, அங்கிருந்து மதுராசெந்தில் வெளியேறினார். இதுகுறித்து, எம்.பி., பிரகாஷ், துணை முதல்வர் உதயநிதிக்கு, நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
அதேபோல், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், தலைவர், கவுன்சிலர்கள் என, இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காததால், மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
கட்சியினரிடையே பல்வேறு குழப்பம் நீடித்த போதும் அதை சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை. அவர் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்திலின் செயல்பாடு, கட்சியினரை அரவணைத்து செல்லாதது, தன்னுடைய ஜாதியினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது என, ஆதாரத்துடன் தலைமைக்கு அடுக்கடுக்காக புகார்கள் சென்றன. இதையடுத்து, கட்சி தலைமை, அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.