/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமான் விதிமீறல் பேச்சுபுகார் - வழக்குகள் பதிவு
/
சீமான் விதிமீறல் பேச்சுபுகார் - வழக்குகள் பதிவு
ADDED : பிப் 01, 2025 01:09 AM
சீமான் விதிமீறல் பேச்சுபுகார் - வழக்குகள் பதிவு
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக, பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை கோரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சிற்பி செல்வராஜ் நேற்று மனு வழங்கினார். அதன் விபரம்: இடைத்தேர்தல் பரப்புரை, செய்தியாளர் சந்திப்பில் பொய்யான, அவதுாறான, வன்முறையை விதைக்கும், பிரிவினைவாத, வெறுப்பு அரசியலை சீமான் பேசி வருகிறார். கடந்த, 28ல் அசோகபுரம், நெரிக்கல்மேடு பகுதி பிரசாரத்தில், 'வெடிகுண்டு வீசி விடுவேன்; உங்களை புதைக்கிற இடத்தில் கூட புல் முளைக்காது' என பேசியுள்ளார். இதுபற்றி விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதேபோல் சீமான் மீது, பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பினர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு வழங்கினர். இதன் அடிப்படையில் விசாரித்த கருங்கல்பாளையம் போலீசார், 'சீமான் மீது கலவரத்தை துாண்டும் வகையில் பேசுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது' என மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சின்னம் பொருத்தும் கருவிபாதுகாப்பு அறையில் 'சீல்'
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, 237 ஓட்டுச்சாவடிகளில் நடக்கிறது. இவற்றில் பயன்படுத்த, 850 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த, 29, 30ல் இ.வி.எம்.,களில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி நடந்தது.
இதையடுத்து இ.வி.எம்.,களில் 'சின்னம் பொருத்தும் கருவி' மூலம் 'பேலட் ஷீட்' விபரங்களை நேற்று பதிவேற்றம் செய்தனர். பணி நிறைவு பெற்று, சின்னம் பொருத்தும் கருவியை பாதுகாப்பாக எடுத்து சென்று, கலெக்டர் அலுவலக பாதுகாப்பு அறையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வைத்து, 'சீல்' வைத்தனர்.
மறியலுக்கு பின் அனுமதி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்காக, திருந கர் காலனியில் பொதுக்கூட்டம் நடத்த, தேர்தல் பிரிவு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி நேற்று மேடை அமைக்க முயன்றனர். ஆனால் அனுமதி வழங்கவில்லை எனக்கூறி போலீசார் தடுத்து, முனிசிபல் சத்திரத்தில் அனுமதி வழங்கினர். மாலை, 5.40 மணிக்கு அவ்விடத்தில் மேடை அமைக்க முயன்றபோது, அங்கு வந்த போலீசார், 'இங்கும் அனுமதி இல்லை' என்றனர். இதனால் ஆத்திரமடைந்த நா.த.க.,வினர், வேட்பாளர் சீதாலட்சுமி முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கினர்.