ADDED : டிச 18, 2011 03:49 AM
ஈரோடு: ஈரோட்டில் நடந்த கேரள சமாஜம் செயற்குழுவில், 'எங்களை வாழ வைக்கும்
தமிழகத்துக்கே எங்கள் ஆதரவு' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில்
கேரள சமாஜ கூட்டம், அதன் தலைவர் குட்டன் தலைமையில் நடந்தது. முல்லை
பெரியாறு பிரச்னையில் கேரளாவில் வாழும் தமிழ் சகோதரர்களின் நலம் பாதிக்கும்
வகையில், கேரள மக்கள் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
இந்திய அரசியல்
சாசனத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. கேரள மக்களும், தமிழ்
மக்களும் காலங்காலமாக சகோதரத்துவத்துடன் நடந்து கொள்கின்றனர். தமிழ், கேரள
மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம். நாங்கள்
பிறந்தது கேரளாவில் என்றாலும், நாங்கள் வாழ்வது, எங்களை வாழ வைத்த
தமிழகத்தில் தான். தமிழகத்துக்கு பாதிப்பு தரக்கூடிய எந்த ஒரு செயலையும்
வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைக்கு ஆதரவாக,
தமிழக அரசு எடுக்கக் கூடிய எந்த முடிவையும் வரவேற்கிறோம். கேரளாவில் வாழும்
தமிழர்களின் உடைமைக்கும், உயிர்க்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாரத
பிரதமர் தலையிட்டு, இருமாநில மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் நல்ல முடிவு
ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர்
உன்னிகிருஷ்ணன், பொருளாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
