ADDED : டிச 18, 2011 03:53 AM
சத்தியமங்கலம்: இலவச கிரைண்டர் வருகையால் ஆட்டுக்கல் விற்பனை சரிந்து
தொழிலே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாவு, சட்னி
உள்ளிட்டவை ஆட்டுவதற்கு ஆட்டுக்கல்லும், மசாலா அரைப்பதற்கு அம்மிக்கல்லும்
அதிகம் பயன்பட்டு வந்தன. நாகரிகம் ஏற்பட்டு இயந்திர வாழ்க்கைக்கு மனிதன்
மாறியதன் காரணமாக, ஆட்டுவதற்கு கிரைண்டரும், அரைப்பதற்கு மிக்ஸியும்
பயன்படுத்தப்பட்டது.
தற்போது, தமிழக அரசு இலவசமாக கிரைண்டர், மிக்ஸி
மற்றும் ஃபேன் ஆகியவை வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஆட்டுக்கல் மற்றும்
அம்மிக்கல் விற்பனை அடியோடு முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது, ஆட்டுக்கல்,
அம்மிக்கல் வாங்குவதற்கு ஆளே இல்லை என்கின்றனர் இத்தொழிலில்
ஈடுபட்டுள்ளவர்கள். சத்தியமங்கலம், கோபி ரோட்டில் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி முன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெயகுமார், ஜெயா தம்பதியர்
கூறியதாவது: ஒரு ஆட்டுக்கல் தயாரிக்க இரண்டு நாள் தேவைப்படும். 400
ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். செலவு கழித்து 150 ரூபாய் மட்டுமே
கிடைக்கும். அம்மிக்கல், 250 ரூபாய்க்கு விற்பனை செய்தால், 100 ரூபாய்
லாபம் கிடைக்கும். ஆனால், இதன் விற்பனை அடியோடு நின்றுவிட்டது. கையில்
இருக்கும் ஆட்டுக்கற்களை விற்பனை செய்துவிட்டு, வேறு தொழிலுக்கு
மாறிவிடலாம் என திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
