ADDED : ஜன 22, 2025 01:29 AM
தபால் ஓட்டுப்பதிவு நாளை துவக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஓட்டுக்களை தபாலில் செலுத்தலாம். இதன்படி தொகுதியில், 209 வயதானவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என, 256 பேர் தபால் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு '12-டி' படிவம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஒப்புதல் பெற்றனர். இந்நிலையில் தகுதியானோர் வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நாளை தொடங்கி, 24, 25, 27 தேதி வரை ஓட்டுப்பதிவு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உரிய அரசு சான்றிதழ் நகலை அளித்து ஓட்டுப்போட வேண்டும். இத்தகவலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தெரிவித்துள்ளார்.
300 சேலைகள் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பிரபாகரன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு கருங்கல்பாளையம், காவிரி சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒரு காரில் சேலைகள், ஜாக்கெட் பிட், சால்வை போன்ற ஜவுளிகள் பண்டல், பண்டலாக இருந்தது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த குணசேகரன் என்ற ஜவுளி வியாபாரி, ஈரோடு ஜவுளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த ஜவுளி என்பது உறுதியானது. அவரிடம் பில் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால், 300 சேலைகள், 100 ஜாக்கெட் பிட், 100 சால்வை ஆகியவற்றை பறிமுதல் செய்து, மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.3 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாகன தணிக்கையில், பறக்கும் படை குழுவினர் காதர் மஸ்தான் தலைமையில், காளை மாட்டு சிலை அருகே நேற்று ஈடுபட்டனர். டூவீலரில் வந்த சோளங்காபாளையம், கரூர் பிரதான சாலையை சேர்ந்த ஆறுமுகத்திடம், மூன்று லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தினர். அதேநேரம் வேல்முருகன் என்பவரிடம் பறக்கும் படையினர், 85,500 ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர். அதற்கான ஆவணத்தை வழங்கியதால் தொகையை திரும்ப ஒப்படைத்தனர். ஈரோடு தேர்தல் பிரிவு அலுவலர்கள், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, வீடு, கடைகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். மாநகராட்சி மைய அலுவலகத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 'செல்பி' பாயிண்ட் ஏற்படுத்தி, மக்கள், அதிகாரிகள் 'செல்பி' எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தபால் ஓட்டுக்கு 10 படிவம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடி பணியில், ஆசிரியர்கள், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் என, 1,194 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு கடந்த, 19ல் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. அப்போதே தபால் ஓட்டு அல்லது அவர்கள் பணி செய்யும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போடுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது.
இதுபற்றி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: இடைத்தேர்தல் பணியில், 1,194 பேர் ஈடுபட்டாலும், பெரும்பாலானவர்கள் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி அல்லது பிற மாவட்ட வாக்காளர்களாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு ஓட்டுப்போடும் வாய்ப்பில்லை. தேர்தல் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போதே, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்களை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வு செய்துள்ளோம். தற்போதைய நிலையில், 10க்கும் குறைவானவர்களே தபால் ஓட்டு படிவம் வழங்கி உள்ளனர்.
கவுன்டிங் மையத்தில்
பாதுகாப்பு ஏற்பாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்.,5ல் நடக்கிறது. சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரியில், ௮ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தில் கம்பி, தகரங்களால் ஆன தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஓட்டு பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. முகவர்கள் ஓட்டு எண்ணும் இடத்துக்கு வருவதற்காக தனிப்பாதை, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. பிப்.,1க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேட்பாளர் மீது 4வது வழக்கு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, ஈரோடு ப.செ.பார்க், மணிகூண்டு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பிரசாரம் மேற்கொண்டார். அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, பறக்கும் படை அலுவலர்கள், டவுன் போலீசில் புகாரளித்தனர். இதன்படி வேட்பாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஏற்கனவே சீதாலட்சுமி மீது மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'சீமானுக்கு கட்டுப்பாடு'
இடைத்தேர்தலில் சீமான் பிரசாரத்துக்கு வரும் பட்சத்தில், மாநகரின் ஒரு சில இடங்களில்
அனுமதி வழங்க கூடாது என போலீசார்,
உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம், ஈரோடு பழைய பூந்துறை சாலை பகுதி, பழைய கச்சேரி வீதி, அக்ரஹார வீதி, மாணிக்கம் பாளையத்தில் ஒரு சில பகுதிகள், மாநகராட்சி வார்டு, 28, 34, 51 பகுதிகளில் அனுமதிக்க கூடாது. இப்பகுதிகளில் தான் சீமான் எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர் பலத்துடன் உள்ளனர். இப்பகுதிக்கு சீமான் வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட கூடும். இதனால் அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
பூத்களில் பார்வையாளர் ஆய்வு
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா, ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வளையக்கார வீதி மகாஜன பள்ளி, பி.பெ.
அக்ரஹாரம் இசைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து விபரம் கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமரா எங்கெங்கு பொருத்த வேண்டும் என்பது குறித்தும் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிழல் குறைவான ஓட்டுச்சாவடி மையங்களில்
வாக்காளர்களுக்கு பந்தல் வசதி செய்யவும்
வலியுறுத்தினார்.