/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மஞ்சள் மாநகரில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
/
மஞ்சள் மாநகரில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
ADDED : ஏப் 06, 2025 01:01 AM
மஞ்சள் மாநகரில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
ஈரோடு:ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் கம்பம் ஊர்வலம், வழக்கமான உற்சாகம், மஞ்சள் நீராட்டத்துடன் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
ஈரோடு மாநகர் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் நடப்பாண்டு குண்டம், தேர் திருவிழா கடந்த மாதம், 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, 22ல் கம்பம் நடப்பட்டது. அப்போது முதல் நேற்று மதியம் வரை, லட்சக்கணக்கான மக்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இந்நிலையில் நேற்று மூன்று கோவில்களின் கம்பம் ஊர்வலம் நடந்தது. முதலாவதாக பெரிய மாரியம்மன் கோவில் கம்பம், பின்னர் சின்ன மாரியம்மன் கோவில் கம்பம், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பங்கள் கொண்டு வரப்பட்டு மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேர்ந்தன. அங்கிருந்து கம்பங்களை சுமந்தபடி டன் பூசாரிகள் கிளம்பினர்.
ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, எம்.எஸ்.சாலை, ஜி.ஹெச். ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஸ்வஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹார வீதி வழியாக காரை வாய்க்கால் சென்று நீரில் விடப்பட்டன.
கம்பம் ஊர்வலத்தையொட்டி மாநகரில் மஞ்சள் நீராட்டு நடந்தது. சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர். இதனால் மஞ்சள் மாநகரம், மஞ்சள் நீரில் நனைந்தது. ஊர்வலத்தின் போது கம்பத்துக்கு மிளகு, உப்பு துாவி மக்கள் வழிபட்டனர்.
கம்பம் ஊர்வலத்தை முன்னிட்டு மாநகரில் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. ஊர்வலத்தின் வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நின்று கம்பத்தை வணங்கினர். ஊர்வலத்தின் முன் சிலர் கடவுள் போல் வேடமிட்டு சென்றனர். ஈரோடு எஸ்.பி., சுஜாதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மறுபூஜையுடன் இன்று விழா நிறைவு பெறுகிறது.