/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாயும் வாழைகளுக்கு இழப்பீடு பெறுவதில் சிக்கல்
/
சாயும் வாழைகளுக்கு இழப்பீடு பெறுவதில் சிக்கல்
ADDED : ஏப் 15, 2025 02:14 AM
சாயும் வாழைகளுக்கு இழப்பீடு பெறுவதில் சிக்கல்
திருப்பூர்:
திடீரென வீசும் சூறைக்காற்றுக்கு, வாழை மரங்கள் சாயும் நிலையில், விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்கின்றனர்.
திருப்பூர் மற்றும் அருகேயுள்ள கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி அவிநாசி, பல்லடம், சிறுமுகை, சத்தியமங்கலம், அன்னுார் பகுதியில் அதிகளவிலான விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்பாராமல் வீசும் சூறைக்காற்றுக்கு, வாழை மரங்கள் சாய்வதால், விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குலை தள்ளிய நிலையில், அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள வாழை மரங்கள் சாய்வதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'வாழைக்கு காப்பீடு இருப்பினும், விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. சூறைக்காற்றுக்கு, 'பிர்கா' முழுக்க பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் சேதமடைந்தால் தான், இழப்பீடு வழங்கப்படும் என்ற விதி, நடைமுறையில் உள்ளது; மாறாக, ஒரு பிர்காவில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும், வாழை சேதமடைந்தால், அதற்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
புவியியல் அமைப்புபடி, ஒவ்வொரு பிர்கா, கிராமங்களிலும் மழை பெய்யும் முறையில் மாற்றம் நிகழ்கிறது. ஒரே பிர்காவில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மழை பெய்கிறது; மற்றொரு இடத்தில் மழை பெய்வதில்லை. விதிமுறையை தளர்த்தி, இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.