/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று ஓட்டுப்பதிவு; பாதுகாப்பில் 2,678 போலீசார்
/
இன்று ஓட்டுப்பதிவு; பாதுகாப்பில் 2,678 போலீசார்
ADDED : பிப் 05, 2025 01:21 AM
இன்று ஓட்டுப்பதிவு; பாதுகாப்பில் 2,678 போலீசார்
ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி, ௨,௬௭௮ போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தொகுதியில், 2 லட்சத்து, 27,546 வாக்காளர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, நிழல் வசதி, சாய்வு தளம், மின் விளக்கு வசதி செய்துள்ளனர். ஓட்டுப்பதிவுக்கான மின்னணு இந்த இயந்திரங்கள் அனைத்தும் நேற்று காலை, 11:00 மணிக்கு மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில், 'சீல்' அகற்றப்பட்டு, பாதுகாப்பு லாரிகளில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஓட்டுச்சாவடி பணியில், 1,194 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இன்று காலை, 5:30 மணிக்கு வேட்பாளர், முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கும். அதை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை, 6:00 மணி நடக்கும். ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை.
ஓட்டுச்சாவடிகள் மற்றும் பொது இடங்களிலும் சேர்த்து, துணை ராணுவ வீரர்கள், 300 பேர், பட்டாலியன் போலீஸ், 450 பேர், ஆயுதப்படை போலீஸ், 250 பேர், சட்டம் ஒழுங்கு போலீஸ், 1,678 பேர் என, 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எஸ்.பி., ஜவகர் தலைமையில் மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய அதிவிரைவு குழுவினர் ரோந்தில் ஈடுபடுகின்றனர்.
4 மாதிரி ஓட்டுச்சாவடி
கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில், 4 மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைத்துள்ளனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 'பெண்கள் மட்டுமே பணி செய்யும்' ஓட்டுச்சாவடியும், எஸ்.கே.சி., சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 'மாற்றுத்திறனாளிக்கள் பணி செய்யும்' ஓட்டுச்சாவடி அமைத்துள்ளனர்.
காளை மாட்டு சிலை அருகே, பாலசுப்பிரமணியன் வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இளம் வயதினர் மட்டும் பணி செய்யும் ஓட்டுச்சாவடியும், சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஓட்டுச்சாவடியை நவீன மாதிரி ஓட்டுச்சாவடியாக வண்ண திரைச்சீலைகள், இருக்கைகளுடன் அமைத்துள்ளனர்.