ADDED : டிச 18, 2011 03:52 AM
கோபிசெட்டிபாளையம்: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெயரில் மஞ்சள்
விற்பனை செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை வருமான
வரித்துறை கண்டுபிடித்துள்ளதால், மஞ்சள் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பாசனம், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை,
எல்.பி.பி., ஆகிய பாசனங்களில் ஒரு லட்சம் ஏக்கர் வரை மஞ்சள்
பயிரிடப்படுகிறது. ஈரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம்,
வெளிமார்க்கெட், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி மூலம், விவசாயிகள் மஞ்சள்
விற்பனை செய்கின்றனர். மஞ்சள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு வருமான வரி
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சொசைட்டிகளில் மஞ்சள் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, 2008-09 ம்
ஆண்டு மஞ்சள் கொள்முதல் தொடர்பாக, 12 வகையான கேள்விகள் கேட்டு, ஈரோடு
வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விவசாயிகளுக்கு வருமான வரி
விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸால்
விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சொசைட்டிகளில் மஞ்சள் விற்பனை செய்யும்
சிறு, குறு விவசாயிகள், தாங்கள் கொண்டு வரும் மஞ்சள் மூட்டைகளை விற்பனை
செய்து விட்டு, பணத்தை வாங்கி சென்று விடுகின்றனர். அதற்கு பில் எதுவும்
கொடுப்பது கிடையாது. ஆனால், இந்த பில்லை வியாபாரிகள், தொழில் அதிபர்கள்
தங்கள் பெயரில் வாங்கி, வருமான வரி விலக்கு பெற்றுள்ளனர்.
மஞ்சள் விற்பனையில் விவசாயிகள் மட்டுமின்றி, தொழில் அதிபர்கள், டாக்டர்கள்,
இன்ஜினியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் பலர் விவசாயிகள் பெயரில்
மஞ்சள் விற்பனை செய்து, பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றுள்ளதை, வருமான
வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். உண்மையான விவசாயிகள் யார்
என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், வருமான வரித் துறையினர்
விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம், பூதாகரமாக
வெடித்துள்ளது. வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை முழுமையாக ஆய்வு
செய்தால், பல வியாபாரிகள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பெயரில்
போலியாக மஞ்சள் விற்பனை செய்த வியாபாரிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
