/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி நகராட்சி மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
கோபி நகராட்சி மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஆக 13, 2024 07:43 AM
கோபி: ''கோபி நகராட்சி மெத்தனமாக செயல்படுகிறது,'' என கோபி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேரை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன், யூனியன் ஆபீசில் நேற்று சந்தித்தார். அப்போது நகராட்சி வணிக வளாக கட்டடம் குறித்து, அ.தி.மு.க., நகர செயலாளர் பிரினியோ கணேஷிடம் அவர் ஆலோசனை செய்தார். இதை தொடர்ந்து செங்கோட்டையன் கூறியதாவது:
கோபி பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள வணிக வளாகம் கட்டடம் கட்டி, 28 ஆண்டுகளாகிறது. ஆனால், 40 ஆண்டுகளானதாக கூறி, இடித்து கட்டமைக்க, ஆன்லைனில் நகராட்சி மூலம் டெண்டர் விட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வியாபாரிகளை அழைத்து பேசி அவர்களின் ஒப்புதலை நகராட்சி பெறவில்லை.
வியாபாரிகள் வணிக வளாகத்தில், மூன்றடுக்கு கட்டடத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு, ஒரு தளத்தை மட்டுமே கட்டமைக்க முடியும். வணிக வளாகத்தில் உள்ள பிரச்னை மற்றும் குறைகளை, துறை ரீதியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. வணிக வளாக கட்டடத்தை இடிக்க, 18 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி மெத்தனப்போக்கு கொண்டுள்ளது.
மூன்று தளத்துடன் கூடிய வணிக வளாக கட்டடத்தை கட்டமைக்க, தேவையான நிதி பெற்று, வியாபாரிகளையும் அழைத்து பேசி, அவர்களின் ஒப்புதல் பெற்றபின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் உடனிருந்தனர்.

