'பேலட் ஷீட்கள்' வருகை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் 'பேலட் ஷீட்கள்' ஈரோட்டுக்கு வந்தது.
இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: இடைத்தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா மூன்று இ.வி.எம்.,கள், தலா ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு வி.வி.பேட் பயன்படுத்தப்படும். ஒரு இ.வி.எம்.,ல், 16 வேட்பாளர்கள் விபரம் ஒட்டப்படும். இதன்படி மூன்று இ.வி.எம்.,களில், 48 வேட்பாளர் பெயர், சின்னம் இடம் பெறும். 46 வேட்பாளர்கள் உள்ளனர். 47வது இடத்தில் நோட்டோ இடம் பெறும். 48வது இடம் அடைத்து வைக்கப்படும். ஒவ்வொரு இ.வி.எம்.,களிலும் வேட்பாளர் விபரம் கொண்ட 'பேலட் ஷீட்' ஒட்டப்படும். இதன்படி, 852 இ.வி.எம்.,களில் 'பேலட் ஷீட்' ஒட்டப்படும். 'பேலட் ஷீட்கள்' சென்னையில் அச்சிடப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
துப்பாக்கிகள் ஒப்படைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த, 7ம் தேதி அறிவித்தவுடன், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதன்படி தொகுதியில் உள்ள, 286 துப்பாக்கிகளை உரிமதாரர்கள் உடனடியாக போலீசில் ஒப்படைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதி, 268 துப்பாக்கிகளை உரிமதாரர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் துப்பாக்கிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
தபால் ஓட்டு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதை கடந்த முதியவர், 2,529 பேர்; 1,570 மாற்றுத்திறனாளிகள் என, 4,099 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிடம் தபால் ஓட்டு பெறுவதற்காக உரிய படிவம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தபால் ஓட்டை பெறும் பணி நேற்று துவங்கியது. மாநகராட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து நான்கு குழுவாக வீடுகளுக்கு புறப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும், 2 ஓட்டுச்சாடி நிலை அலுவலர், 1 நுண் பார்வையாளர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் என நான்கு பேர் சென்றனர். வரும், 25, 27 தேதிகளிலும், தபால் ஓட்டு சேகரிப்பு பணி நடக்கும். மாலை, 6:00 மணிக்கு நிறைவடைந்ததில், 116 பேரிடம் தபால் ஓட்டு பெறப்பட்டது.
விழிப்புணர்வு பேரணி
இடைத்தேர்தலில், 1௦௦ சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாநகராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார். மாநகராட்சி அலுவலர்கள், மக்கள், மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு செய்தனர். பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, துணை ஆணையர் தனலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

