ADDED : பிப் 23, 2025 01:53 AM
17ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் :திருப்பூர் மாவட்டம், 17வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது.திருப்பூர் மாநகராட்சி துவக்க விழா, 2007 டிச., மாதம் நடந்தது. விழாவில் பங்கேற்ற, அப்போதைய முதல்வர் கருணாநிதி, திருப்பூரை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி அரசாணை, 2008 அக்., 24ல் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் இருந்த, காங்கயம், தாராபுரம் தாலுகா, கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை தாலுகாக்களை இணைத்து மாவட்டம் உருவானது. கடந்த, 2009 பிப்., 22ம் தேதி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட துவக்க விழா நடந்தது.
அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் துவக்கி வைத்தார். மூன்று வருவாய் கோட்டங்கள்; ஒன்பது தாலுகா, 35 பிர்கா மற்றும், 350 வருவாய் கிராமங்களுடன் அமைந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 265 கிராம ஊராட்சிகள் உள்ளன. 4,566 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட கிராமப்பகுதி; 42.65 சதுர கி.மீ., நகரப்பகுதி; 478 சதுர கி.மீ., வனம் உட்பட, 5,087 சதுர கி.மீ., பரப்பளவில் மாவட்டம் அமைந்துள்ளது.
கடந்த, 2011 கணக்
கெடுப்பின்படி, 24.80 லட்சம் மக்கள் இருந்தனர். தொழில் வளர்ச்சி காரணமாக, வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது, 21 மாநிலங்களை சேர்ந்த மக்களும், சேர்ந்து வசிக்கும் மாவட்டமாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
நிர்வாக வசதிக்காக, 2014ல், அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி தாலுகாவும், திருப்பூர் தாலுகா, வடக்கு மற்றும் தெற்கு என, இரண்டாகவும் பிரிக்கப்பட்டன. தாலுகாக் களின் எண்ணிக்கை, தற்போது, ஒன்பதாக உயர்ந்துள்ளது. கடந்த, 2011 உள் ளாட்சி தேர்தலின் போது, மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. மாவட்டத்தின் எட்டாவது கலெக்டராக கிறிஸ்துராஜ் பணியாற்றி கொண்டிருக்கிறார். இரண்டு அணைக்கட்டுகள், பி.ஏ.பி., - அமராவதி, கீழ்பவானி பாசனம், அவிநாசி -அத்திக்கடவு திட்டம் என, விவசாயம் செழிக்கும் மாவட்டமாக இருக்கிறது.
உலக புகழ்பெற்ற பின்னலாடை தொழில், விசைத்தறி, காங்கயம் அரிசி ஆலை மற்றும் எண்ணெய் ஆலைகள், திருமுருகன்பூண்டியில் சிற்பத்தொழில், அனுப்பர்பாளையத்தில் பாத்திரத்தொழில், ஊத்துக்குளி வெண்ணெய். காங்கயம் காளை என, பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஏழாவது தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் மாவட்டம், 16 ஆண்டுகளை முடித்து, 17ம் ஆண்டு பயணத்தை துவக்கியிருக்கிறது.

