டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலி:உடலை பெற மறுத்து உறவினர் மறியல்
டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலி:உடலை பெற மறுத்து உறவினர் மறியல்
ADDED : மார் 26, 2024 02:26 AM
தாராபுரம்;தாராபுரம் அருகே, சாலையோர கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தோர் மீது, டிப்பர் லாரி மோதியதில், இருவர் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொள்ளாச்சி ரோட்டில், சின்னக்கம்பாளையம் பிரிவு அருகே, நேற்று காலை, 10:30 மணியளவில், சாலையோர கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சென்ற ஒரு டிப்பர் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது. துாக்கி வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சின்னபுத்துாரை சேர்ந்த ஆறுமுகம், 56, சம்பவ இடத்தில் பலியானார். மற்ற இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த தங்கம்மாள், 62, செல்லும் வழியிலேயே இறந்தார். நாச்சிமுத்து என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். டிப்பரை நிறுத்திவிட்டு டிரைவர் பிரதீப் ஓட்டம் பிடித்தார். அவரை கைது செய்யக்கோரியும், உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டும், உடலை வாங்க மறுத்து, 50க்கும் மேற்பட்டோர், தாராபுரம் அரசு மருத்துவமனை முன், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலால் என்.என்.பேட்டை வீதி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால், அந்த சாலை மற்றும் பூக்கடைக் கார்னர் பகுதியில், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தாராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
