ADDED : மே 26, 2024 07:18 AM
திருப்பூர் :வசந்தம் மற்றும் கோடைகால நவீன ஆடை ரகங்களுடன், 51வது இந்தியா நிட்பேர் கண்காட்சி, வரும் செப்., 4ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
திருப்பூர் ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், ஆண்டுக்கு இரண்டு முறை, 'இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர்' கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, குளிர்கால ஆடைகள் மற்றும் 'பேப்ரிக்' ரகங்கள் அணிவகுக்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், செப்., 4ல் துவங்கி, மூன்று நாட்களுக்கு, 51 வது 'இந்தியா நிட்பேர்' கண்காட்சி நடக்கிறது. கடந்தாண்டு நடந்த, 49வது கண்காட்சி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தவகையில், இதுபோன்ற கண்காட்சிகள் மூலமாக, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை சாதனைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
திருப்பூரில் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி அம்சங்களை விளக்கி, மீண்டும் வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச வர்த்தகர்களை கவர்ந்திழுக்கும் வகையில், 51வது கண்காட்சியை சிறப்புடன் நடந்த, கண்காட்சி ஏற்பாட்டு குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.