/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர் மின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா
/
நீர் மின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா
நீர் மின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா
நீர் மின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா
ADDED : மார் 22, 2024 01:27 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் இரண்டாம் போகத்தில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 1 லட்சத்து, 3,500 ஏக்கரில் எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு குறைவு, பாசன பகுதியில் மழை இல்லாததால், 5 நனைப்புக்கு சிறு இடைவெளியில் தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட்டனர்.
இதற்கிடையே, நீர் பற்றாக்குறையால், முறை வைத்து தண்ணீர் திறந்து வருகின்றனர். கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, நீர்வளத்துறை பவானி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் அறைக்குள், விவசாயிகள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிகாரியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க தலைவர் பெரியசாமி, செயலர் பொன்னையன் கூறியதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து அரசாணைப்படி தண்ணீர் திறக்க, மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால், மாறாகவே செயல்படுகிறது.
அணையில் நீர் இல்லை என்பதால், கீழ்பவானி பாசனத்துக்கு, 5 நனைப்புக்கு தண்ணீர் திறப்பதாக கூறி, 3 நனைப்புக்கு தண்ணீர் திறந்துள்ளனர். அதற்குள் நீர் இருப்பை காரணம் காட்டி திறக்க முடியாத நிலையை கூறுகின்றனர்.
ஆனால், பிற பாசனங்களுக்கு முறை வைத்து நீர் திறக்கின்றனர். குடிநீருக்கு, 50 கன அடி தண்ணீர் போதுமானது. ஆனால், 150 கன அடி திறக்கின்றனர்.
அனுமதியற்ற மற்றும் அனுமதி பெற்ற நீரேற்று பாசனங்களுக்கு தற்போதைய நீர் பற்றாக்குறையை காரணம் கூறி, தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது.
எனவே, நீர் மின் அணையில் இருந்து தண்ணீரை பவானிசாகர் அணைக்கு திறந்து, கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
ஒரு மணி நேர தர்ணாவுக்கு பின், கோவையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இன்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதாகவும், அதற்கு முன், நீர் மின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளிக்கவே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

