ADDED : ஜூன் 28, 2024 01:48 AM
திருப்பூர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலையடிவாரங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி, தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் வழிந்தோட துவங்கியிருக்கிறது. தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியிருப்பதால் அணைகள் நிரம்பி, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்; விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கடந்த எதிர்பார்ப்பான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் பருவமழையை நம்பியே உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையில் பில்லுார் அணை நிரம்பி, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.