ADDED : மார் 06, 2026 04:30 AM
சத்தியமங்கலம்: நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நுாறு நாள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு இந்திய கம்யூ., ஈரோடு மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமை வகித்தார். முன்னதாக அமைச்சர் முத்துசாமி, மாநாட்டை பார்வையிட்டு ஆதரவு தெரிவித்து சென்றார்.
தொடர்ந்து தி.மு.க.,- காங்.,- மா.கம்யூ., - வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இ.கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார். நுாறு நாள் வேலைத்திட்ட உரிமையை பறிக்கும் வி.பி.ஜி.,ராம்.ஜி சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வலுவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உரிமை சட்டத்தை கொண்டு வர வேண்டும், வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, 700 ரூபாயாக கூலி உயர்த்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.சத்தி, பவானிசாகர், புளியம்பட்டி, கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
