ADDED : ஏப் 02, 2026 04:16 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட அளவில் தேர்தல் தொடர்பாக இதுவரை, 1,205 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 1800 424, வாட்ஸ் ஆப் புகார், 90425 80535, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, 0424 2267670, 2267673, 2267674 போன்ற எண்களில், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம். மேலும், 'சி-விஜில்' ஆப் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம்.
இவற்றுடன் தேர்தல் நடக்கும், 8 சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக எண்களிலும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்களிடமும் புகார் தெரிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று வரை மாவட்ட அளவிலும், 1950 என்ற எண்ணிலும் சேர்த்து, 1,205 புகார்கள் பதிவாகி உள்ளது. இப்புகார் பெறப்பட்டதும், உடனடியாக தொடர்புடைய தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பதிவு செய்யப்படுகிறது.
இதன்படி மாவட்ட அளவில் பெறப்பட்ட, 1,205 புகாரில், ஒரு புகார் மட்டுமே விசாரணையில் உள்ளது. மற்ற அனைத்து புகார்களும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது. இவற்றில் பெரும்பாலானவை சின்னங்கள், கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்கள் போன்றவை அகற்றப்படவில்லை, வாக்காளர் அடையாள அட்டை எப்போது வரும், வாக்காளர் பெயர் இடம் பெறவில்லை, வாக்காளர் எழுத்தில் தவறு உள்ளது போன்றவையே, 80 சதவீதமாகும்.
