ADDED : ஆக 20, 2025 01:17 AM
ஈரோடு,சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் ரவின்குமார், கனகராஜ், மாணவி வர்ஷினி ஆகியோர், கொடிவேரி அணை பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பவானி ஆற்று மணல் பகுதியில் ஒரு கற்சிலை புதைந்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மணலை அகற்றி சிலையை மீட்டனர். எட்டு கைகள் கொண்ட பெண் தெய்வ சிலை என்பது தெரிந்தது. கையில் ஈட்டி ஏந்தி, காலில் ஒரு மனிதனை மிதித்து வதம் செய்த நிலையில், கண்கள் உக்கிரமாக, இயல்புக்கு மாறாக காதுகள் பெரிதாக காணப்பட்டன. இதுபற்றி ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி, சிலையை ஆய்வு செய்து கூறியது:
இந்த கற்சிலை, 14ம் நுாற்றாண்டை சேர்ந்தது. 41 செ.மீ., உயரம், 28 செ.மீ., அகலம் கொண்டது. பத்ரகாளியின் அம்சமான நிசம்பசூதணி பெண் தெய்வ சிலையாகும். இவ்வாறு கூறினார்.
