ADDED : அக் 16, 2025 02:06 AM
கோபி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனங்களில் உள்ள, 38 கொள்முதல் நிலையங்களில், இதுவரை, 16 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த மே., 26 முதல், செப்.,22 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்நீரை கொண்டு இரு பாசனங்களிலும், டி.பி.எஸ்-5, ஏ.எஸ்.டி.,-16 என விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்., மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இருந்து, இரு பாசனங்களிலும், நெல் அறுவடை பணி துவங்கியதால், நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மொத்தம், 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன. அதில் இதுவரை, 16 ஆயிரத்து, 354 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு போகத்தில் அதிகபட்சம், 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 60 சதவீதம் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளதாக, அதன் அதிகாரிகள்
தெரிவித்தனர்.