ADDED : மார் 25, 2026 07:08 AM
பவானிசாகர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், திம்பத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்சூரிலிருந்து பெங்களூருவுக்கு கர்நாடகாவை சேர்ந்த நெல்சன் சென்றார். அவரிடம், 18 கிலோ வெள்ளி கொலுசு இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் திம்பத்தில், காரில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம், உரிய ஆவணம் இல்லாததால், 65,000 ரூபாய்; பண்ணாரி செக்போஸ்ட் பகுதியில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம், 1.34 லட்சம் ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகரை அடுத்த பெரியகள்ளிப்பட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகே, சரக்கு வாகனத்தில் போலீசார் நேற்று சோதனை செய்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ஆகாஷிடம், உரிய ஆவணம் இல்லாததால், 60 ஆயிரத்து, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சலுாரில், பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பவானியில் இருந்து கரூருக்கு பைக்கில் சென்ற, கரூரை சேர்ந்த பாலசுப்பிரமணியிடம், 1.45 லட்சம் ரூபாய் இருந்துத. பைனான்ஸ் தொகை மற்றும் சீட்டு பணம் என தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* பெருந்துறை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், காஞ்சிக்கோவில், தண்ணீர்பந்தல்பாளையம் அருகே நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். கொளத்துாரை சேர்ந்த சூரன் பிக்-அப் வேனில் வந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், 63 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தோட்டத்தில் வாழைக்காய் வெட்டும் ஆட்களுக்கு, கூலி கொடுத்த கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
* காஞ்சிக்கோவிலை அடுத்த கருங்கரடு அருகில், ராயல் என்பீல்டு பைக்கில் வந்த, பெருந்துறை அடுத்த நல்லாம்பட்டி, ஊஞ்சபாளையத்தை சேர்ந்த குணசேகரனிடம், ஐந்து லட்சம் ரூபாய் இருந்தது. உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நிருபர் குழு
