/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் 2 பேர் உயிரிழப்பு
/
கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் 2 பேர் உயிரிழப்பு
கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் 2 பேர் உயிரிழப்பு
கரூர் அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் 2 பேர் உயிரிழப்பு
ADDED : ஏப் 24, 2025 02:10 AM
கரூர்:
கரூர், அமராவதி ஆற்றில் மூழ்கி, இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கரூர் அருகில், அமராவதி ஆற்றில் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை உள்ளது. கரூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், அங்குள்ள ஆற்றில் கிணறு தோண்டி, பலர் சட்ட விரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தண்ணீரில் குளிப்பதற்காக, குழந்தைகள் செல்வதுண்டு. ஆனால், பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு இருப்பது தெரியாமல் மூழ்கி இறந்து விடுகின்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நேற்று, தடுப்பணையிலிருந்து, 500 மீட்டர் தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத, அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ஆழமான இடத்திற்கு சென்று விட்டதால், இரண்டு மாணவர்கள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதை பார்த்த மற்றொரு மாணவர் செய்வது அறியாமல் அங்கிருந்து வேகமாக ஓடி விட்டான். தகவல் அறிந்து, அப்பகுதி மக்கள் ஆற்றுக்குள் சென்று பார்த்த போது, இரு மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கரூர் வெங்கமேடு பாலகிருஷ்ணா நகர் 1வது கிராஸ் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் திவிங்சன், 13, என்றும், இவர், வாங்கப்பாளையம் அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. மற்றொரு மாணவரான, வெங்கமேடு ஜீவா நகரை சேர்ந்த சுரேஷ் மகன் கவிதாசன், 15, என்பதும், வாங்கலில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. இரு மாணவர்கள் நீரில் முழ்கி
இறந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.