தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மாவட்ட அளவில் 2,757 பேருக்கு சிகிச்சை
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மாவட்ட அளவில் 2,757 பேருக்கு சிகிச்சை
ADDED : மார் 01, 2026 08:29 AM

ஈரோடு: காசநோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், மாவட்ட வாரியாக காசநோயாளிகள் கண்டறியப்படும் இடங்களில் முகாம்கள் நடத்தி, சளி பரிசோதனை செய்து, காசநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சையும், ஆரோக்கியமான உணவு பெறும் வகையில், 6,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் காசநோயாளிகள் கண்டறியப்பட்டால், அவருடன் உள்ளவர்கள், அவர் பணி செய்யும் இடத்தில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்து, உறுதிப்படுத்துகின்றனர்.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ஏப்., முதல் கடந்த ஜன., வரை மாவட்ட காசநோய் மையம் உட்பட பல்வேறு இடங்களில் சளி பரிசோதனை, முகாம்கள் நடத்தி, 74,593 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 2,757 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்க பரிந்துரைத்தனர். அதில், முறையாக, 2,441 பேர் பதிவு செய்து, 2,390 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சையை முழுமையாக நிறைவு செய்யாமல், 13 பேர் நிறுத்தி கொண்டனர். அவர்களையும் கண்டறிந்து சிகிச்சையை தொடர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையில் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்ற மற்றும் சிகிச்சை பெறாதவர்கள் என, 117 பேர் இறந்துள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
