ADDED : மே 06, 2026 04:18 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் போட்டி யிட்ட, 118 பேரில், 94 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
சட்டசபை
தேர்தலில் போட்டியிடுவோர், 10,000 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தி
வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
தொகுதியில் பதிவான ஓட்டில், ஆறில் ஒரு பங்கு அல்லது 16.67 சதவீத
ஓட்டுக்களை பெற்றால், டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். அவ்வளவு
ஓட்டுக்களை பெறாவிட்டால் டெபாசிட் தொகை கிடைக்காது. மாவட்டத்தில்
எட்டு தொகுதிகளில், 118 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 94
வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி
கட்சி மற்றும் த.வெ.க., வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும்
வகையில் ஓட்டு பெற்றனர். நா.த.க., வேட்பாளர் உட்பட சுயேட்சைகள் என
அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
அதேபோல எட்டு தொகுதியிலும்,
நோட்டோ பெற்ற ஓட்டைவிட தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி
வேட்பாளர்கள் த.வெ.க., மற்றும் நா.த.க., வேட்பாளர்கள் மற்றும் மூன்று
சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே கூடுதல் ஓட்டு பெற்றனர். மற்ற அனைத்து
வேட்பாளர்களும் நோட்டோவைவிட குறைவான ஓட்டுக்களே பெற்றனர்.
