/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் பொது நுாலகம்
/
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் பொது நுாலகம்
ADDED : செப் 09, 2024 06:36 AM
ஈரோடு: வீரப்பன்சத்திரத்தில் கடந்த, 25 ஆண்டுகளாக பாழடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ள கட்டடத்தில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பொது நுாலகம் செயல்பட்டு வருகிறது. சிறிய அளவிலான 8 க்கு 8 அடி நுாலகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு, 2000 உறுப்பினர்கள் உள்ளனர். தினமும், 50 முதல் 100 பேர் வரை வந்து புத்தகங்கள், நாளிதழ்களை படித்து செல்கின்றனர். போதிய இட வசதியில்லாததால், வாசகர்கள் சாலையோரமாக இருக்கும் திட்டில் அமர்ந்து படிக்கின்றனர்.
இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது: நுாலகம் சிறிய அளவில் இருப்பதோடு, ஆங்காங்கே கட்டடம் பழுதடைந்து காணப்படுகிறது. சிறிய கட்டடம் என்பதால், புத்தகங்களை வைக்க போதுமான இடம் இல்லை. நுாலகத்தில் ஒரு வாசகர் கூட அமர்ந்து படிக்க முடியாதபடி, இட நெருக்கடி உள்ளது. இதனால், நாங்கள் சாலையோரமாக இருக்கும் திட்டில் அமர்ந்து படித்து வருகிறோம். மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் புதியதாக நுாலகம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.