ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல் திட்டம்: அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல் திட்டம்: அமைச்சர் முத்துசாமி
ADDED : ஏப் 16, 2026 06:20 AM
ஈரோடு : ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளரும், வீட்டுவசதி துறை அமைச்சருமான சு.முத்துசாமி நேற்று சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு, டீச்சர்ஸ் காலனி, குமலன்குட்டை, சி.எம்.நகர், மாதேஸ்வரன் நகர், கலைஞர் நகர், ஆர்.என்.புதுார், தெய்வபுரம், இந்திரபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திட்டம் வகுக்கப்படும். கனி ராவுத்தர் குளம் பகுதியில், புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. சோலார் பஸ் ஸ்டாண்ட், கனிராவுத்தர் குளம் பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட் என மூன்றும் செயல்பாட்டுக்கு வரும்போது, பொதுமக்கள், பயணிகளின் சிரமம் குறைக்கப்படும்.
சூரம்பட்டி உட்பட நெருக்கடியான பகுதிகளில் தேவையான அளவு சாலை விரிவாக்கம், சாலைகள் அமைத்தல், சாக்கடை வடிகால் அமைத்தல், கழிவுநீர் மேலாண்மை திட்டப்பணிகள் மேம்படுத்தப்படும். கொல்லம்பாளையம்-காளை மாட்டு சிலை அருகே ரயில்வே உயர்மட்ட பாலம், ரங்கம்பாளையம், சாவடி
பாளையம் புதுார் உட்பட தேவையான இடங்களில் ரயில்வே உயர்மட்ட பாலம் அல்லது தேவையான வடிவில் பாலங்கள் அமைத்து, போக்குவரத்து சீரமைக்கப்படும்.
இலவச மின்சாரம் பெறும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு
செட் வழங்கப்படும். இதுபோன்ற திட்டங்கள் தொடர உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
