/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளியில் காலை உணவு திட்டத்தில் கூடுதல் மாணவர் விபரம் சேகரிப்பு
/
பள்ளியில் காலை உணவு திட்டத்தில் கூடுதல் மாணவர் விபரம் சேகரிப்பு
பள்ளியில் காலை உணவு திட்டத்தில் கூடுதல் மாணவர் விபரம் சேகரிப்பு
பள்ளியில் காலை உணவு திட்டத்தில் கூடுதல் மாணவர் விபரம் சேகரிப்பு
ADDED : மே 23, 2024 06:54 AM
ஈரோடு : அரசு பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான காலை உணவு திட்டத்தில், கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் காலை உணவு உண்ணாமல் வந்து விடுவதால், படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. விடுப்பு எடுத்தல், பள்ளிக்கு சரியான நேரம் வராதது, உடல் குறைபாடு, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் நகர்புறம், ஊரக பகுதியில் உள்ள, 31,000 அரசு பள்ளியில், 18.5 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 1,079 அரசு பள்ளிகளில் படிக்கும், 50,451 குழந்தைகளுக்கு சத்தான, சுவையான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி, அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பிற பள்ளிகளுக்கு சென்றவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அத்துடன் புதிதாக, 1ம் வகுப்பில் சேருபவர்கள், 1 முதல், 5 ம் வகுப்பில் புதிதாக சேர்ந்தவர்கள் விபரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்துக்கான உணவு, சத்துணவு அமைப்பாளர்கள் மூலம், அந்தந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமைப்பார்கள். காலை உணவு திட்ட உணவு, மகளிர் குழு, பிற அமைப்பு மூலம் சமைத்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கு தேவையான உணவு முதல் நாளிலேயே கிடைக்கும் வகையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் புதிதாக சேர்ந்த மாணவர்கள் விபரம் சேகரிக்கிறோம். வரும், 10ல் பள்ளி திறக்கப்படும் என கூறுகின்றனர். அரசு அறிவிப்புக்கு ஏற்ப, முதல் நாளிலேயே ஒரு குழந்தை கூட விடுபடாமல் காலை உணவு வழங்கும் வகையில், மாணவ, மாணவியர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.

