ADDED : செப் 25, 2025 02:00 AM
திருச்செங்கோடு, தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆகியவை இணைந்து நடத்திய, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்த ஒருங்கிணைந்த சுகாதார விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி, திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
மாவட்ட திட்ட மேலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் குகன் வரவேற்றார். விவேகானந்தா பார்மசி கல்லுாரி முதல்வர் முருகானந்தம், நகராட்சி துப்புரவு அலுவலர் சோலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடியும், நாட்டுப்புற பாடல்கள் பாடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி, வடக்குரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. கல்லுாரி மாணவியர், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி, கோஷம் எழுப்பி சென்றனர்.