தாராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தாராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : பிப் 09, 2026 08:14 AM
தாராபுரம்: தாராபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, இன்றைய கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை ஜில்லாவில், 1857ல் இருந்த மூன்று பள்ளிகளில் ஒன்றாகும். பழமையான இந்த பள்ளியில் கடந்த காலங்களில், 2,000க்கும் மேற்பட்டோர் படித்தனர். தற்போது, 350 மாணவர் மட்டுமே பயில்கின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் 1975-76 காலத்தில் படித்த மாணவர்களின், பொன்விழா ஆண்டு சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வசிக்கும் அன்றைய மாணவர்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போதைய ஆசிரியரான, 92 வயதாகும் துரைசாமியும், கூட்டத்தில் பங்கேற்றார். தற்போது தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான கயல்விழியின் கணவரான வக்கீல் செல்வராஜ் உள்பட சமூகத்தின் பல்வேறு அந்தஸ்தில் உள்ள முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர் துரைசாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம்பெற்றனர்.
நிறைவாக பேசிய ஆசிரியர் துரைசாமி, ''கடந்த, 1946ல் இதே பள்ளியில் நான் படித்தேன். 1966ம் ஆண்டு முதல் பள்ளியில் பணிபுரிந்தேன். நான் பணிபுரிந்த காலத்தில் ஒழுக்கத்துடன் கல்வி பயின்ற மாணவர்கள் நீங்கள். இன்னும் என்னுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்
