'சாயக்கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு' பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டுகோள்
'சாயக்கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு' பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 13, 2026 03:17 AM

ஈரோடு:ஈரோடு மேற்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., வேட்பாளர் யுவராஜா, ஈரோடு மாநகராட்சி சூரியம்பாளையம் பகுதி, 1, 2 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.சூரியம்பாளையம், சி.எஸ்.நகர், தண்ணீர்பந்தல்பாளையம், அர்சனா நகர், மாமரத்துப்பாளையம், அம்பேத்கர் நகர், சொட்டையம்பாளையம், மரவபாளையம், ஆர்.என்.புதுார் பகுதிகளில் வீடுவீடாகவும், கடைகள், ஆலைகளிலும், தாமரை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:இப்பகுதியில் விசைத்தறி, கைத்தறிகள் நிறைந்த பகுதி. இங்கு சாய, சலவை, பிளீச்சிங் ஆலைகள், தோல் தொழிற்சாலைகள், துணிகளை அலசுதல் என பல தொழில் சார்ந்தோர் வசிக்கின்றனர். நிரந்தரமாக பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், தொழில் மட்டுமின்றி தொழிலாளர்களும் பாதிக்கின்றனர்.
அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைந்ததும், சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஜவுளி சார்ந்த தொழில் முன்னேற்றத்துக்கான படிப்பு, வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும். இப்பகுதியினர், பெருமாள்மலை பகுதியில் உள்ளோர் வீட்டுமனை பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்படும். ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட இணைப்பு அனைத்து பகுதிக்கும் விரிவாக்கம் செய்வதுடன், தண்ணீர் கட்டணம், சொத்து வரி உயர்வை குறைக்க அரசிடம் பேசி தீர்வு காணப்படும்.மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராமலிங்கம், சூரியம்பாளையம் பகுதி செயலர் கே.சி.பழனிசாமி, பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில், த.மா.கா., மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட பலர் உடன் சென்றனர்.
