/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்காந்தள் மலருக்கு செயற்கை மகரந்த சேர்க்கை
/
செங்காந்தள் மலருக்கு செயற்கை மகரந்த சேர்க்கை
ADDED : டிச 10, 2024 02:02 AM
செங்காந்தள் மலருக்கு செயற்கை மகரந்த சேர்க்கை
காங்கேயம், டிச. 10-
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில், புதுப்பை, மூலனுார், தாராபுரம் பகுதிகளில், தோட்டக்கலை பயிராக செங்காந்தள் சாகுபடி ஆண்டுதோறும், ௧,௦௦௦ முதல் 2,௦௦௦ ஏக்கர் வரை நடக்கிறது. இந்த செங்காந்தள், புற்றுநோய் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
செங்காந்தள் கிழங்கு மே முதல் ஆக., வரை முளைக்கும். அக்., முதல் நவ., வரை பூக்கள் பூத்து காய்க்கும். மழை காலம் தவிர்த்து மற்ற காலத்தில் கிழங்குகள் ஓய்வுத்தன்மை நிலையில் இருக்கும். ஒரு ஏக்கருக்கு நடவு முதல் விதை சேகரிப்பு அறுவடை வரை, 4 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பயிர்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த, பூச்சி மருந்துகளும் அடிக்கப்படுகின்றன.
இதனால் தேனீ, குளவிகள், தட்டான், ஈக்கள் குறைந்து, செடிகளில் தன் மகரந்த சேர்க்கை குறைந்து விட்டது. மேலும் நன்மை செய்யும் பூச்சியினங்களும் அருகி போனதால், தற்போது விவசாயிகள் வேலையாட்களை வைத்து, மனித கைகளால் செயற்கை மகரந்த சேர்க்கை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு வருடமாக மகரந்தம் உள்ள பூவிதழ்களில் இருந்து, மகரந்தம் இல்லாத இதழ்களுக்கு கைகளால் செயற்கை மகரந்த சேர்க்கை செய்வது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து செங்காந்தள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக செங்காந்தள் விதை சாகுபடி செய்து வருகிறோம். தொடர் மழையால் செடி அழுகல் உள்ளிட்ட நோய்களால் விதை உற்பத்தி குறைந்துள்ள சூழல் ஏற்படுகிறது.
விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டு, விதைகளை விற்பனை செய்ய முடியாமல் சேமித்து வைத்து காத்திருக்கவேண்டி இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது.
தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்து விதைக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் சமயத்தில் மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கவும் வேண்டும். இவ்வாறு கூறினர்.

